Sathyanarayana Story

  1. முதல் அத்தியாயம்
    1. ஒரு சமயம் நைமிசாரண்யத்தில் சவுனகாதி முனிவர்கள் ஸூதபௌராணிகரை, “விரும்பும் பலத்தை வரத்தாலும் தவத்தாலும் எவ்வாறு விரைவில் பெற முடியும்”? என்று கேட்டனர். ஸூதரும் பகவான் நாரதருக்குக் கூறியதைச் சொல்லுவதாகச் கூறிச் சொல்ல ஆரம்பித்தார். நாரதர் பிறருக்கு அருள் புரிய பூவுலகம் சென்றார். அங்குத் துன்புற்ற மக்களைக் கண்டார். “இவர்களது துன்பத்தைப் போக்கும் வழி என்ன?” என்று அறிவதற்காக விஷ்ணு லோகம் சென்று பகவானை வேண்டினார். மஹாவிஷ்ணுவும் நாரதரிடம். “நாரதா, கேள் ஏதேனும் ஒரு தினத்தில் சுற்றம் சூழ அந்தணர்களுடன் ஸத்ய நாராயண விரதத்தைச் செய்யலாம். பக்தியுடன் நைவேத்யங்களை ஸமர்ப்பிக்க வேண்டும். வாழைப்பழம், கோதுமை மாவு அல்லது அரிசி மாவு, நெய், பால், சர்க்கரை, பக்ஷணவர்க்கங்கள் எல்லாம் நைவேத்யம் செய்ய வேண்டும். அந்தணரிடம் இந்த விரத மகிமையைக் கேட்டு தக்ஷிணை அளித்து எல்லோருக்கும் உணவு அளித்து வீடு திரும்ப வேண்டும். இது கலியுகத்தில் கண்கூடாகப் பயனளிக்க வல்லதாம் ” என்று கூறினார்.
  2. இரண்டாவது அத்தியாயம்
    1. ஸூதர் கூறுகிறார். அழகிய காசி நாட்டில் ஏழை அந்தணன் ஒருவன் பசி தாகத்தால் அலைந்து கொண்டு இருந்தான். பகவான் அவனிடம் அன்பு கொண்டு ஒரு கிழவன் போல் வேடம் பூண்டு அவனிடம் பரிவுடன், “நீ ஏன் மிகவும் துன்புற்று அலைந்து திரிகிறாய்? என்று கேட்டார். “பிக்ஷை பெறுவதற்கு என்று சொல்லி கிழவரே அதற்கு வழி காட்ட வேண்டும் என்று வேண்டினான். அவரும் அவனை ஸத்ய நாராயண விரதம் செய்யும்படிக் கூறி அதன் முறையையும் உபதேசித்து மறைந்தார். அந்தணனும் அதைச் செய்வதாக உறுதி பூண்டு பிக்ஷைக்காக நகருக்குச் சென்றபோது மிக அதிகமான பொருள் பெற்றான். அதைக் கொண்டு உற்றார் உறவினருடன் ஸத்ய நாராயண பூஜையை நன்றாகச் செய்தான். அவன் துன்பம் நீங்கியது செல்வந்தன் ஆனான். பின்னர் இதை விடாது செய்து இறுதியில முக்தியும் பெற்றான்.அந்தணன் இந்தப் பூஜையைச் செய்து வரும் காலத்தில், ஒரு நாள் விறகு வெட்டி ஒருவன், தெருத் தெருவாய் விறகு விற்றுக்கொண்டு வந்தான். தன்னையும் மறந்து, அங்கிருந்த பக்தர்களுடன் பூஜையில் ஈடுபட்டான். பூஜையில் பகவானுக்கு நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதங்கள், விறகு வெட்டிக்கும் கிடைத்தன. பக்தியுடன் உண்டான். அந்தணரிடம் பூஜை பற்றிய விபரங்கள் தெரிந்து கொண்டு தானும் செய்யப் போவதாகக் கூறினான். மறுநாள் விறகுவிற்கச் சென்றபோது அனைத்தும் விற்று விட்டன. ஸத்ய நாராயண பூஜை பிரசாதம் உண்டதின் பலன் இது என்று மகிழ்ந்தான். அவனும் அப்பூஜை செய்து செல்வன் ஆனான். முக்தி அடைந்தான்.
  3. மூன்றாவது அத்தியாய ஸாரம்
    1. ஸுதர் மேலும் கூறுகிறார். உல்காமுகன் என்ற அரசன் தான தர்மங்கள் செய்து அந்தணர்களை மகிழ்வித்து வந்தான். அவன் மனைவி ஸத்ய நாராயண விரதம் செய்து வந்தாள். அங்கு வணிகன் ஒருவன் வந்து “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்டான். ஸந்தான ஸம்பத்துக்களை விரும்பி ஸத்யநாராயண பூஜை செய்வதாக அரசன் கூறினான். வணிகனும் தனக்கும் குழந்தை பிறந்தால் இதனைச் செய்வதாக வேண்டிக் கொண்டான். அவனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அவன் மனைவி ஸத்ய நாராயண பூஜை செய்யுமாறு சொன்னாள். தங்கள் பெண்ணுக்குத் திருமணம் ஆன பிறகு அதைச் செய்வதாகக் கூறினான். அவளுக்குத் திருமணமும் ஆயிற்று. வணிகன் பூஜையை மறந்தே போனான். ஒரு முறை அவன் தன் மருமகனுடன் வாணிபத்தின் பொருட்டு ரத்நஸார நகரம் சென்றான். பகவான் அவன் வேண்டுதலை நிறைவேற்றாததால், அவன் தவறை அவனுக்கு உணர்த்த எண்ணி, அவனுக்கு சற்றே துன்பம் உண்டாகும்படி செய்தார். வணிகன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு அரசனைக் காணச் சென்று அங்கு தங்கினான். அன்று திருடன் ஒருவன் அரண்மனையில் திருடிய பொருட்களுடன் காவலர்க்கு அஞ்சி இவர்கள் தங்கிய இடத்திற்கு வந்து, தான் திருடிய பொருட்களை அங்கு வைத்துவிட்டு மறைந்து போனான். அந்த திருடர்களைப் பின்பற்றி வந்த காவலர்கள், அங்கு வந்து இவ்விருவரையும் திருட்டுச் சொத்துடன் பிடித்து, அரசனிடம் ஒப்படைத்தார்கள். அரசன் இவ்விருவரையும் சிறையில் அடைத்தான். வணிகனின் மனைவியும், மகளும் தங்களிடமுள்ள எல்லாப் பொருட்களையும் பறி கொடுத்துவிட்டு, உண்ண உணவின்றித் தவித்தனர். மகள் ஒருநாள் ஒரு பிராம்மணன் வீட்டிற்குச் சென்று. அங்கு நடந்த ஸத்ய நாரயண பூஜையில் கலந்து கொண்டாள். பின்னர் அங்கு கதை கேட்டும், பிரசாதத்தை உண்டும். மகிழ்ச்சியுடன் வீடு திரும்பித் தன் தாயிடம் நடந்ததைத் தெரிவித்தாள். அவளும் மன மகிழ்ச்சியுடன் தன் சக்திக்குக் தகுந்தபடி ஸத்யநாராயண விரதத்தை நடத்தினாள். பகவானும் அரசனது கனவில் தோன்றி, வணிகனையும் அவன் மருமகனையும் விடுவிக்கும்படிக் கட்டளையிட்டார்.
  4. நான்காம் அத்தியாயம்
    1. வணிகன் சான்றோர்க்கு தக்ஷிணை தானம் செய்துவிட்டு, பின் ஓடத்தில் ஏறித் தன் நகருக்குச் சென்றான். சிறிது தொலைவு சென்றதும் ஸத்ய நாராயணர் ஒரு பிரம்மச்சாரி வடிவில் தோன்றி ஓடத்திலிருப்பது என்ன? என்று கேட்டார். அவனும் அந்த ப்ரம்மசாரியிடம் உண்மையை மறைக்க எண்ணி, அதிலிருப்பது இலைகளும், கொடிகளுமே என்று பதில் கூறினான். “அவ்வாறே ஆகுக ” என்று கூறிப் பகவானும் சிறிது தள்ளிச் சென்று நின்றார். ஓடத்தில் கொடியும் இலைகளுமே இருப்பதைக் கண்டு வணிகன் வருந்தினான். அப்போது, அவனது மருமகன், “இது பிரம்மசாரியின் சாபத்தால் நேர்ந்தது. அவரிடமே அடைக்கலம் புகுவோம் ” என்றான். வணிகன் பிரம்மசாரியைக் கண்டு வணங்கி, மன்னிக்கும்படி வேண்டினான். பகவானும் கருணை கொண்டு அவனுக்கு அருள் புரிந்தார். பின்னர் அவன் நகருக்குச் சென்றதும் தன் வீட்டிற்கு ஒரு தூதுவனை அனுப்பினான். அப்பொழுது அவன் மனைவியும் மகளும் ஸத்ய நாராயண பூஜை செய்து கொண்டிருந்தனர். அவர்களை வரவேற்கும் பரபரப்பில் மகள் பகவானின் பிரஸாதத்தை உண்ண மறந்து விட்டாள். அவரின் இந்த தவற்றை அவனுக்கு உணர்த்த எண்ணிய பகவான் மருமகனுடன் ஓடத்தை நீரில் மூழ்கும்படி செய்தார். அங்கு மருமகனைக் காணாமல் அனைவரும் வருந்தினர். மகள் தன் கணவனது பாதரக்ஷையை எடுத்து வைத்துக்கொண்டு தானும் கணவன் போல் நீரில் மூழ்கிவிட எத்தனித்தாள். வணிகன் அச்சமயம் பூஜை செய்ய நேர்ந்து கொண்டான். அச்சமயம்இறைவன் அசரீரியாய்க் கூறினார் “வணிகனே! உன் மகள் பூஜையின் பிரசாதத்தை உண்ண மறந்து விட்டாள். இது பெரும் அபசாரம். இவள் அதை உண்டபின் தன் கணவனைக் காண்பாள்” என்றார். அப்படியே அவள் வீட்டிற்குச் சென்று பிரசாதத்தை உண்டுவிட்டுத் திரும்பியதும் நீருக்குமேல் வந்த ஒடத்தில் பணத்துடன் தன் கணவனைக் கண்டு மகிழ்ந்தாள்.
  5. ஐந்தாவது அத்தியாயம்
    1. துங்கதவஜன் என்னும் அரசன் ஒருமுறை காட்டிற்குச் சென்று, பல துஷ்ட மிருகங்களை வேட்டையாடி விட்டு ஓர் ஆலமரத்தின் அடியில் வந்து தங்கினான். அங்கு ஆயர்குல மக்கள் ஸத்யநாராயண பூஜையை மிக்க பக்தி சிரத்தையுடன் செய்து, பூஜை முடிந்ததும் அரசன் என்பதால் முதலில் அரசனுக்குப் பிரசாதத்தைத் தந்தனர். அரசன் அதை மதிக்கவில்லை. இடையர்கள் தந்ததை புசிப்பதா என்று எண்ணி அதை புசிக்கவில்ல. உதாஸீனம் செய்தான். உடனே அவனுடைய நூறு பிள்ளைகளும் உயிரிழந்தனர். அவனுடைய சொத்தும் அழிந்து போயிற்று. உடனே தான் செய்த தவற்றை உணர்ந்தான். உடனே அந்த ஆலமரத்திற்கு விரைந்து சென்று ஆயர்களுடன் தானும் அப்பூஜையைச் செய்யலானான். ஸத்ய நாராயண சுவாமியின் அருள் பெற்று முன்பு போல் பிள்ளைகளையும் சொத்துக்களையும் பெற்றுச் சுகமாய் வாழ்ந்தான்.

 

Success stories 

ஸத்யநாராயண பூஜையைச் செய்து சரித்திரத்தையும் சிரவணம் செய்பவன் பகவானின் அருள் பெறுவான். ஏழ்மை விலகும். அநியாயமாய் சிறைத் தண்டனை பெற்றவன் விடுவிக்கப் படுவான். பயம் நீங்கும் விரும்பிய எல்லாம் கிடைக்கும். சந்தேகமில்லை. கலியுகத்தில் விசேஷ பலன்களைத் தர வல்லது இது. இந்தக் கதையைப் படிப்பவரது பாவங்கள் நீங்கும். இந்தப் பூஜை செய்த அந்தணர் மறு பிறப்பில் குசேலராகப் பிறந்து கிருஷ்ணருடைய அருள் பெற்றார். விறகு விற்பவன் குஹப் பெருமானாகப் பிறந்து இராமனது அருளுக்குப் பாத்திரமானான். உல்காமுகன் தசரதனாகப் பிறந்து ரங்கநாதரது திவ்ய கடாக்ஷம் பெற்று முக்தி அடைந்தான். வணிகன் மோரத்வஜனாகப் பிறந்து தன் உடலில் பற்றின்றி, பிராம்மணனுக்குத் தன் சதையை அறுத்துத் தந்து மோக்ஷம் அடைந்தான். துங்கத்வஜன் நான் முகனானான்.

 

குறிப்பு: இந்த நான்கு அத்தியாய கதைகளிலிருந்தும் ஒரு விசேஷமான உண்மை தெரிவது என்னவென்றால் ஜாதி பேதம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் இந்த பூஜையை செய்யலாம் என்பதுதான்.

பூஜைக்கேற்ற காலங்கள்“ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற பவுர்ணமியன்று மாலையில் சந்த்ரோதய காலத்தில் ஸத்யநாராயண வ்ரதம் அனுஷ்டிப்பது உசிதம் ” என்கிறது ஸ்காந்தம். இப்பூஜையைப் பவுர்ணமியில் செய்யலாம். அப்படிப் பவுர்ணமியன்று செய்ய இயலாதவர்கள் அமாவாஸை, அஷ்டமி, த்வாதசி, ஞாயிறு, திங்கள், வெள்ளி, வ்யதீபாதம், ஸங்கராந்தி, தீபாவளி, புரட்டாசி மாதச் சனிக்கிழமைகள் மற்றும் அவரவர் ஜாதகத்தில் சந்திரன் அனுகூலமாக இருக்கும்போது இப்பூஜையைச் செய்யலாம்.

 

 

 

 

 

The website encountered an unexpected error. Please try again later.